ஆளும் கட்சி அமளியால் மேல்-சபை 2 முறை ஒத்திவைப்பு

மும்பையை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.எல்.சி. வித்யாசவான் மீது தனது மருமகளை துன்புறுத்தியதாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-03-05 23:00 GMT
மும்பை,

மராட்டிய மேல்-சபையில் பெண்கள் பிரச்சினை குறித்த விவாதம் நேற்று நடந்தது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேகர், வித்யா சவானுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கை குறிப்பிட்டு பேசினார்.

அப்போது அவர் வித்யாசவானின் பெயரை குறிப்பிடாமல், “பெண்கள் பிரச்சினையை பற்றி இங்கு விவாதிக்கும் வேளையில், நம்மிடம் இருக்கும் உறுப்பினர் ஒருவர், அவரது மருமகளுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். இது ஒரு பெண்ணை நல்ல முறையில் நடத்துவதற்கான வழி அல்ல” என்று கூறினார்.

இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் பாய் ஜக்தாப் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் ஹேமந்த் தாக்கலே ஆகியோர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையின் மையப்பகுதியில் வந்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பாரதீய ஜனதாவின் பிரசாத் லாட், பாய் கிர்கர் உள்ளிட்டோர் பிரவீன் தரேகரை பேசி முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். இந்த குழப்பத்தை தொடர்ந்து மேல்-சபை துணை தலைவர் நீலம் ஹேரே அவையை 10 நிமிடங்கள் ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடிய போது, இந்த விவகாரத்தில் மீண்டும் பிரவீன் தரேகர் பேச முயன்ற போது, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து மீண்டும் சபை 5 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த பிரச்சினை மேல்-சபையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்