திருமணம் ஆனதை மறைத்து காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

லத்தேரி அருகே திருமணம் ஆனதை மறைத்து காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-03-05 22:00 GMT
காட்பாடி,

காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரும் லத்தேரி அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ரஞ்சித்குமாரும் (வயது 26) கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்துள்ளனர்.

ரஞ்சித்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் நெருங்கி பழகி உள்ளார். அதன் காரணமாக அவர் கர்ப்பமானார். சிறுமி இந்த விஷயத்தை ரஞ்சித்குமாரிடம் தெரிவித்து உடனடியாக திருமணம் செய்யும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் காலம் கடத்தி ஏமாற்றி வந்துள்ளார். இதற்கிடையே சிறுமி கர்ப்பமானது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது ரஞ்சித்குமாருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானதாக கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ரஞ்சித்குமார் குறித்து அப்பகுதியில் விசாரித்தனர். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தது. ரஞ்சித்குமார் தனது மகளை ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கியதை அறிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் லத்தேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்