சங்கரன்கோவிலில் பரபரப்பு: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி தலைமை ஆசிரியர் கைது

சங்கரன்கோவிலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-03-05 11:34 GMT
ஜான் கென்னடி
பள்ளி தலைமை ஆசிரியர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் புது 1-ம் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது 51). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளிக்கு சென்று தகராறு செய்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவரை அருகில் உள்ள கிராமத்துக்கு மாற்றியதாக கூறப்படுகிது. ஆனால், அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தற்போது உள்ள தலைமை ஆசிரியரே போதும், இவர் வேண்டாம் என்று கூறி போராட்டம் நடத்தினர். இதனால் அவர் அங்கு போய் பணியில் சேர முடியாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கைது
சுமார் 5 மாதங்கள் கடந்த பிறகும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இதுபற்றி மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்குமார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜான் கென்னடி தலைமை ஆசிரியராக இருந்த நேரத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஜான் கென்னடியை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்