தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் இல்ல திருமண வரவேற்பு; மணமக்களை உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்
கரூரில் நடந்த தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
வரவேற்பு நிகழ்ச்சி
தி.மு.க.வின் மாநில நெசவாளர் அணி செயலாளராக கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்த பரணி மணி உள்ளார். இவரது மனைவி சித்ரா மணி. இவர்களது மகன் எம்.சதீசுக்கும், ஆர்.சஞ்சனாவுக்கும் இன்று (வியாழக்கிழமை) கரூர் அட்லஸ் கலையரங்கில் திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கரூர் அட்லஸ் கலையரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கரூருக்கு, தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.
இவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மண்மங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இரவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, உதயநிதி ஸ்டாலினை, மணமகனின் பெற்றோர் பரணி மணி-சித்ரா மணி, மணமகளின் பெற்றோர் ரகுபதி-கிருஷ்ணவேணி உள்பட குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பின்னர் மணமேடைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சின்னசாமி.ஈரோடு முத்துசாமி, முத்தூர் சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கரூர் மனோகரா கார்னர், மண்மங்கலம், கோவை ரோடு, சேலம் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. கொடி-தோரணங்கள் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.