மும்பையில் தங்கம் விலை ‘கிடுகிடு’ உயர்வு; பவுன் ரூ.33,920-க்கு விற்பனை

மும்பையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.33 ஆயிரத்து 920-க்கு விற்பனை ஆனது.

Update: 2020-03-05 00:12 GMT
மும்பை, 

தங்கம் விலை வரலாறு காணாத ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. மும்பையில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.25 ஆயிரம் என்று இருந்த நிலையில், ஆண்டின் இறுதியில் ரூ.30 ஆயிரம் வரை சென்றது.

அதன்பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை கடந்தது.

தொடர்ச்சியாக விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வந்து, கடந்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது.

அதையடுத்து சற்று விலை குறைந்து இருந்தது. இதுவும் வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. மீண்டும் விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 100-க்கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.140-ம், பவுனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 240-க்கும், ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது.

இதுகுறித்து, நகை வியாபாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக இருப்பதால், மற்ற பொருட்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதேபோல், அமெரிக்கா பெடரல் வங்கி கூட்டமைப்பில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைந்துவிட்டது. இதனால் வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தவர்கள், தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த காரணங்களினாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து இருப்பதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்