சாமி சிலைகள் திருட்டு வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையன் கைது

சாமி சிலைகள் திருட்டு வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-04 22:30 GMT
திருச்சி,

திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஐம்பொன் சிலை உள்பட 31 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். சாமி சிலைகள் கொள்ளை தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 9 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 21 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. மேலும் சிலைகள் கொள்ளை தொடர்பாக பிரபல கொள்ளையனான சிவகங்கை மாவட்டம,் காரைக்குடி அருகே உள்ள கே.நெற்புகப்பட்டியை சேர்ந்த சரவணப்பெருமாள் என்பவரை தேடி வந்தனர். விசாரணையில் அவர், சிங்கப்பூர் சென்று அங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

10 ஆண்டுகளுக்கு பின் கைது

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணப்பெருமாள் சொந்த ஊர் திரும்பியது தெரியவந்தது. அவர், நேற்று முன்தினம் திருச்சி மாநகரில் சுற்றித் திரிவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன், இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ராஜசேகரன் மற்றும் போலீசார் திருச்சி மாநகரில் கண்காணிப்பில் ஈடுபட்டு சரவணப்பெருமாளை(வயது 40) கைது செய்தனர்.

10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைக்கு பின் கொள்ளையன் சரவணப்பெருமாள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது மேலும் 2 இடங்களில் சாமி சிலைகள் திருடிய வழக்குகளும் உள்ளன. கைதான அவர், நேற்று கும்பகோணம் கூடுதல் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்