தென்காசி கல்வி மாவட்ட அளவில் உலக திறனாய்வு திட்ட தடகள போட்டிகள் பாவூர்சத்திரத்தில் 10–ந் தேதி நடக்கிறது
தென்காசி கல்வி மாவட்ட அளவில் உலக திறனாய்வு திட்ட தடகள போட்டிகள் பாவூர்சத்திரத்தில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.
தென்காசி,
தென்காசி கல்வி மாவட்ட அளவில் உலக திறனாய்வு திட்ட தடகள போட்டிகள் பாவூர்சத்திரத்தில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தடகள போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி பிரிவு சார்பில் 2019–2020–ம் கல்வியாண்டில் கல்வி மாவட்டத்திற்கான உலக திறனாய்வு திட்ட கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடக்கிறது.
இந்த போட்டிகள் தென்காசி கல்வி மாவட்டம் பாவூர்சத்திரம் டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 10–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
போட்டிகள் காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து கண்டிப்பாக வீட்டு முகவரியுடன் கூடிய வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. வீரர், வீராங்கனைகள் அவரவர் பிரிவில் ஏதேனும் ஒரு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெறும் 324 மாணவ–மாணவிகளுக்கு டி–சர்ட், சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த போட்டியில் முதல் 2 இடங்களில் வெற்றி பெறும் மாணவ–மாணவிகள் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.
பயிற்சி முகாம்
மேலும் ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் ஒவ்வொரு போட்டிகளில் இருந்தும் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ–மாணவிகள் மொத்தம் 360 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாராந்திர பயிற்சி முகாம், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களாகிய சிறப்பு அகாடமிகள், விளையாட்டு பள்ளிகள் மற்றும் விளையாட்டு விடுதிகள் ஆகியவற்றில் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 0462–2572632 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.