காதொலி கருவிகளை பொருத்தி பாட்டு கேட்பதால் கேட்கும் திறன் குறையும்- விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

காதொலி கருவிகளை பொருத்தி நீண்ட நேரம் பாட்டு கேட்பதால் கேட்கும் திறன் குறையும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2020-03-04 10:39 GMT
அரசு ஆஸ்பத்திரியில் செவித்திறன் நாளையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உலக செவித்திறன் நாளையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி தலைமை தாங்கினார். காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர்கள் மணிகண்டன், மதுமதி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

காதில் சீழ் வடியாமல் பார்த்து கொள்ள வேண்டும். சீழ் வடிந்தால் கேட்கும் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. காதில் தண்ணீர் புகாமலும், எண்ணெய் போன்ற இதர திரவங்களை காதில் ஊற்ற கூடாது. ரத்த வடிதல், நாற்றத்துடன் கூடிய சீழ் ஆகியவை ஆபத்துக்கு அறிகுறியாகும். காதில் சீழ் வடிந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை சாப்பிட கூடாது. மகப்பேறு காலத்தில் தேவையில்லாத மருந்துகளை சாப்பிடுதல், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதிக இரைச்சல்
தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் எப்படி? உள்ளது என்பது குறித்த பரிசோதனை செய்யப்படுகிறது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனையில் கேட்கும் திறன் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காது கேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. இந்த சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு ஊசிகளை போட வேண்டும்.

மேலும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட விடுவதால் அந்த குழந்தையின் தகவல் தொடர்பு திறனை வளர்க்க முடியும். அதிக இரைச்சல், நீண்ட நேரம் காதொலி கருவிகளை பொருத்தி கொண்டு பாட்டு கேட்பதால் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் குறைபாடு, சந்தேகம் இருந்தால் தாமதம் செய்யாமல் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நல டாக்டர் ராணி, செவிலியர்கள், நோயாளிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்