கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் மும்முரம் - அதிகாரிகள் பார்வையிட்டனர்
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியன் கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் மூன்று கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து 2018-2019-ம் ஆண்டுகளில் மாநில தொல்லியல் துறை சார்பில் இரண்டு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. கீழடியில் 5 கட்டங்களாக அகழாய்வுபணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழடியில் நீதிஅம்மாள் என்பவரது நிலத்தில் குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளையும், அதில் கிடைத்த பொருட்களையும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வந்து பார்வையிட்டுள்ளனர். 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற ஆரம்பித்தபோதும் பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள், வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். எனவே பார்வையாளர்கள் வந்து செல்ல சாலை வசதியை ஒழுங்குபடுத்தி, வாகன நிறுத்தம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியம் கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெத்தினவேலு, ஜெகநாதசுந்தரம், ஒன்றிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.
காப்பாட்சியர் ஆசைத்தம்பி அதிகாரிகளிடம் விளக்கமளித்தார். தொடர்ந்து திட்ட இயக்குனர் வடிவேல், பார்வையாளர்கள் வந்து செல்ல சாலை வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், பார்வையாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.