பிலிப்பைன்சில் இருந்து குமரிக்கு வந்த மருத்துவ மாணவருக்கு கொரோனா பாதிப்பு?

பிலிப்பைன்சில் இருந்து வந்த குமரி மாவட்ட மருத்துவ மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2020-03-03 22:30 GMT
நாகர்கோவில், 

சீனாவில் பலரது உயிரை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருக்கிறது. இந்தியாவில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளாவில் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். எனவே குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மூலமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

எனினும் யாரேனும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு மற்றும் அறிகுறிகளை பரிசோதிக்கும் வார்டு ஆகிய 2 வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த வார்டில் ஏற்கனவே சீனாவில் இருந்து குமரி மாவட்டம் வந்த ஒரு மாணவியும், ஹாங்காங்கில் இருந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு முதியவரும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 2 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் பிலிப்பைன்சில் மருத்துவம் படித்து வரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர் பிலிப்பைன்சில் தங்கி படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான குமரி மாவட்டம் வந்த அவருக்கு திடீரென மூக்கடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்று மாணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து தான் பிலிப்பைன்சில் வசிப்பதாகவும், தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து மாணவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது, “கொரோனா வார்டில் மாணவர் அனுமதிக்கப்பட்ட அன்றே அவருடைய ரத்தம் மற்றும் மூக்கு வழியாக எடுக்கப்பட்ட சளி ஆகியவை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? என்று உறுதிபட சொல்ல முடியும். பரிசோதனை முடிவு நாளை (அதாவது இன்று) காலை வர வாய்ப்பு உள்ளது. அதுவரையிலும் மாணவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருப்பார்“ என்றார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் நோய் தொற்று ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக வார்டை சுற்றிலும் நேற்று மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரி வளாகத்திலும் கொசு மருந்தை தெளிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்