கோபி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய வாலிபர் கைது

கோபி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-03-03 21:30 GMT
கடத்தூர், 

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் மேலாளராக சபரிகிரீசன் உள்ளார். இந்த வங்கியின் அருகிலேயே ஏ.டி.எம். மையமும் உள்ளது.

சம்பவத்தன்று வங்கியின் மேலாளர் சபரிகிரீசன், மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைப்பதற்காக வந்து உள்ளார். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் சேதம் அடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றிருக்கலாம் என எண்ணினார். உடனே அவர் இதுகுறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேதம் அடைந்த ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியவர் யார்? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘அவர் வெள்ளாங்கோவிலை அடுத்த ெதான்னேரிபாளையத்தை சேர்ந்த தொழிலாளியான கவுண்டமணி என்கிற வெள்ளியங்கிரி (வயது 29),’ என தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து தலைமறைவான கவுண்டமணியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வெள்ளாங்கோவில் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் தொன்னேரிபாளையத்தை சேர்ந்த கவுண்டமணி என்பதும், அவர்தான் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியதும்,’ தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறுவலூர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று தனியாக விசாரித்தனர். அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘சம்பவத்தன்று வெள்ளாங்கோவிலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றேன். அப்போது நான் குடிபோதையில் இருந்தேன். உள்ளே சென்ற நான், என்னிடம் இருந்த ஆதார் அடையாள அட்டையை ஏ.டி.எம். எந்திரத்தில் சொருகினேன். ஆனால் பணம் வரவில்லை. இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே நான் மையத்தில் இருந்து வெளியே வந்து கல்லை எடுத்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தினேன்,’ என்றார்.

இதைத்தொடா்ந்து கவுண்டமணியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவுண்டமணி, கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு பாரதி பிரபா உத்தரவிட்டார். இதையடுத்து கவுண்டமணியை கோபியில் உள்ள மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்