பல்லடத்தில், இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

பல்லடத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2020-03-02 22:15 GMT
பல்லடம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள்கள் பிரியா (வயது 21), நந்தினி (19). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அவர்கள் வசிக்க தனியார் நிறுவனத்தின் சார்பில் பல்லடம் மகாலட்சுமி நகரில் வாடகை வீடு ஏற்பாடு செய்து தரப்பட்டு இருந்தது.

அந்த வீட்டில் வசித்து வந்த பிரியா மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது வீட்டில் இருந்த உயரமான ஜன்னல் கம்பியில் நந்தினி நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்லடம் வந்தனர். நந்தினியின் தோழிகளுடன் பேசிய உறவினர்கள் பின்னர் நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று மாலை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடம் ஆஸ்பத்திாி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் நந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று நந்தினியின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

மேலும் செய்திகள்