மிசா காலத்தில் சிறை சென்ற தியாகிகளுக்கு ஓய்வூதியம் - இல.கணேசன் வலியுறுத்தல்
மிசா காலத்தில் சிறை சென்ற தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று இல.கணேசன் வலியுறுத்தினார்.
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெருக்கடி நிலை கால போராட்ட வீரர்கள் சங்கத்தின் தமிழ்நாடு அமைப்பின் 3-வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் கந்தகுமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஓம்சக்தி பாபு முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மிசா காலத்தில் சத்தியாகிரகம் செய்தால்கூட கைது செய்வார்கள். சிறை சென்றவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். பல மாதங்கள் குடும்பத்தையும் மறந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர் போராட்டம் காரணமாக மிசா ரத்து செய்யப்பட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ் என்னை தோற்கடித்து விட்டது என்று இந்திராகாந்தி கூறினார்.
மிசா காலத்தில் பல இன்னல்களை அனுபவித்த தியாகிகளுக்கு இந்த அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரெயில்வே துறை இருக்கிறது. ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் மிசா காலத்தில் சிறை சென்றவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். மேலும், மிசா காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
மிசா காலத்தில் போராடிய தியாகிகளுக்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், மராட்டியம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தியாகிகள் ஓய்வூதியம், போக்குவரத்து சலுகை மற்றும் இலவச மருத்துவ உதவி வழங்கி வருகிறது. இதுபோல் தமிழக அரசும் மிசா கால தியாகிகளுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.
நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பல கோரிக்கைகளை பாரதீய ஜனதா அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் நிறைவேறி வருகிறது. உதாரணமாக காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை நீக்கவேண்டும், முத்தலாக் தடை சட்டம், சி.ஏ.ஏ அமலாக்கம், ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. மிசா கால தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு கையெழுத்து மட்டும்தான் போட வேண்டும். இதை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையோடு தான் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்கான காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு இல.கணேசன் பேசினார்.
மாநாட்டில் நெருக்கடி நிலை கால போராட்ட வீரர்கள் சங்க அகில இந்திய தலைவர் கோவர்த்தன் பிரசாத் அடல், துணைத்தலைவர் ஆனந்தராஜன், அசோக்குமார் யாதவ், கேரள மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில பொருளாளர் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.