திருவெறும்பூர் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை தெருவில் வீச்சு தாய் யார்? போலீசார் விசாரணை

திருவெறும்பூர் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை தெருவில் வீசப்பட்டு கிடந்தது. அந்த குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-03-03 00:30 GMT
துவாக்குடி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிதாசன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவர், நேற்று அதிகாலை எழுந்து வெளியே சென்றபோது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அரசு வழங்கும் விலையில்லா சேலையில் சுற்றப்பட்டு தெருவோரம் வீசப்பட்டு கிடந்ததை கண்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த பெண் குழந்தையை தூக்கி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தாய் யார்?

அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலக ஊழியர்கள் காட்டூர் மருத்துவமனைக்கு வந்து அக்குழந்தையை மீட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். குழந்தையின் எடை குறைவாக உள்ளதால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்குழந்தை பிறந்து 24 மணி நேரமே இருக்கும் என்று மருத்துவ ஊழியர்கள் கூறினர். பெண் குழந்தையை தெருவில் வீசி சென்ற தாய் யார்?, வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று தெரியவில்லை. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்த குழந்தையை தெருவில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்