வங்கியை பூட்டி வாடிக்கையாளர்கள் போராட்டம்; சோளிங்கரில் பரபரப்பு
சோளிங்கரில் அடகு வைத்த ரூ.4½ கோடி நகை மோசடி செய்யப்பட்ட நிலையில் இதுவரை திருப்பித்தராததால் வங்கியை திறக்கவிடாமல் பூட்டி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோளிங்கர்,
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சுப்பாராவ் வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2017-ம் ஆண்டுக்கு முன்பு 162 வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை காணவில்லை. அந்த நகைகளை வங்கி மதிப்பீட்டாளர் பாபு மோசடி செய்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4½ கோடியாகும்.
இது குறித்து வங்கியின் கிளை மேலாளர் சிவக்குமார் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வங்கி மதிப்பீட்டாளர் பாபு மீதுவழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.
அதன்பின் தங்களது நகைகளை வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியில் முறையீடு செய்து வந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 மாதத்திற்குள் நகை பிரச்சினையில் தீர்வு காணப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை வங்கியை திறக்க விடாமல் அவர்கள் ஒன்று கூடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வங்கி மேலாளர் அளித்த தகவலின்பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வங்கியை திறந்தனர். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், காவேரிப்பாக்கம், பாணாவரம் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அடமானம் வைத்த நகைகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்வு காணப்படும் என்று எழுத்து மூலம் உறுதியளித்தனர். இதனை ஏற்று 3 மணிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் நேற்று பிற்பகல் 3 மணி வரை வங்கி இயங்கவில்லை.