வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாத 28 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைப்பு- கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு

வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாத 28 குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதன்காரணமாக கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-02 10:16 GMT
பேரணாம்பட்டு பகுதியில் குடிநீர் ஆலை ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தபோது எடுத்தபடம்.
ஐகோர்ட்டு உத்தரவு
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத தனியார் குடிநீர் ஆலைகளை கண்டுபிடித்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி இயங்கி வருகிறதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் வழங்கவும், மேலும் நிலத்தடி நீர் எடுக்க உரிமம் பெறாத ஆலைகள் குறித்து கணக்கெடுக்கவும் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 குடிநீர் ஆலைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைப்பு
அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறையின் நில நீர்ஆதாரப்பிரிவினர் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் ஆலைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 37 ஆலைகள் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறாமல் இயங்குவது தெரிய வந்தது. இந்த ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடி ‘சீல்’ வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நில நீர்ஆதார உதவி நிலவியலாளர் திருநாவுக்கரசு தலைமையில் ஊழியர்கள் குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு நேற்று காலை முதல் ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக வேலூர் மாநகரம், பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட 28 குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. மீதமுள்ள குடிநீர் ஆலை ஆழ்துளை கிணறுக்கு இன்று (திங்கட்கிழமை) ‘சீல்’ வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கேன் தண்ணீர் தட்டுப்பாடு
குடிநீர் உற்பத்தி ஆலைகளின் ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைப்பு மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகரில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் கேன் தண்ணீரையே நம்பி உள்ளனர்.

அதைத்தவிர வேலூர் நகரில் உள்ள தங்கும்விடுதிகள், ஓட்டல்கள், மருத்துவமனைகளில் கேன்தண்ணீரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைப்பு காரணமாக கேன் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்று கேன்களில் தண்ணீர் நிரப்பி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். வேலூர் மாநகரின் பல இடங்களில் கேன் தண்ணீர் கிடைக்காததால் இல்லதரசிகள் சமையலுக்கு ஆழ்துளை கிணற்றின் நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்