திமிரி அருகே, பெண் திடீர் சாவு - சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்

திமிரி அருகே பெண் திடீரென உயிரிழந்தார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-03-01 21:30 GMT
ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுகுமார் (வயது 45), விவசாயி. இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கந்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவநீதம் (40) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு நவநீதம் இறந்துவிட்டதாக அரசுகுமார், நவநீதத்தின் தந்தை முனியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் முனியப்பன் குடும்பத்தினர் தாமரைப்பாக்கத்திற்கு வந்தனர்.

நவநீதம் திடீரென இறந்ததால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக முனியப்பன் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நவநீதத்திற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்