ஈரோடு கீரக்காரவீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் விழா - திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்
ஈரோடு கீரக்காரவீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.
ஈரோடு,
ஈரோடு கீரக்காரவீதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கடந்த மாதம் 21-ந் தேதி இரவு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
23-ந் தேதி காலையில் பக்தர்கள் காரை வாய்க்காலுக்கு சென்று பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 28-ந் தேதி இரவு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் தீக்கனல்களால் தயாராக இருந்த குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தலைமை பூசாரி ஜெகநாதன் தீ மிதித்து குண்டம் விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
பெண்கள், சிறுவர்-சிறுமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மதித்தனர்.
விழாவையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் மலர் பல்லக்கில் அம்மனின் திருவீதி உலா நடந்தது.