திருட வந்த இடத்தில் போதையில் தூங்கிய கொள்ளையன்

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் திருட வந்த இடத்தில் போதையில் படுத்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-29 23:14 GMT
பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், ராஜூவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கடந்த வாரம் இவரது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள இவரது மளிகை கடை உள்பட 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்று விட்டார். இதுபற்றி மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கடையின் படிக்கட்டில் வாலிபர் ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

திருட வந்த இடத்தில்...

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், அந்த வாலிபரை எழுப்பி விசாரித்தனர். போதையில் இருந்த அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரது மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச்சேர்ந்த சதீஷ் என்ற கிளி சதீஷ்(வயது 23) என்பதும், கடந்த வாரம் முத்துக்குமாரின் மளிகை கடை உள்பட 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை திருடியதும், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் அந்த கடையில் கொள்ளையடிக்க வந்தபோது, போதை தலைக்கேறியதால் திருட முடியாமல் அந்த கடையின் வாசலிலேயே படுத்து தூங்கியதும் தெரிந்தது.

சதீசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்