மாவட்டம் முழுவதும் 84 மையங்களில், 20 ஆயிரத்து 500 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்

மாவட்டம் முழுவதும் நாளை மறுநாள் 84 தேர்வு மையங்களில் 20 ஆயிரத்து 500 மாணவர்கள், பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர்.

Update: 2020-02-28 22:00 GMT
திண்டுக்கல், 

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் பழனியில் 20 மையங்களும், திண்டுக்கல்லில் 26 மையங்களும், வத்தலக்குண்டுவில் 24 மையங்களும், வேடசந்தூரில் 14 மையங்களும் என மொத்தம் 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 594 மாணவர்கள், 10 ஆயிரத்து 906 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 500 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மேலும் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே வினாத்தாள்கள் அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரவழைக்கப்பட்டன. பின்னர் அவை கல்வி மாவட்டம் வாரியாக தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்