கண்டலேறு அணையில் இருந்து முதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி.தண்ணீர்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

Update: 2020-02-28 22:30 GMT
ஊத்துக்கோட்டை, 

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மறைந்த எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது ஆந்திர முதல்- அமைச்சராக இருந்து என்.டி.ராமாராவுடன் தெலுங்கு கங்கை திட்டத்தை ஒப்பந்தம் செய்து கொண்டார். இது கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டம் அழைக்கப்படுகிறது. அதன்படி கண்டலேறு அணையில் இருந்த பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்த வெளிகால்வாய் அமைக்கப்பட்டது. இப்பணிகள் 1983-ல் தொடங்கப்பட்டு, 2015-ல் முடிக்கப்பட்டன.

இதையடுத்து, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு, தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி.தண்ணீர் வழங்க வேண்டும்.

ஒரே தவணையில்...

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வழங்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து, 1996-ல் முதன் முதலாக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பட்டது. இந்த 25 ஆண்டுகளில் 2011-ம் ஆண்டு இரு தவணையும் சேர்த்து, அதிகபட்சமாக 7.976 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை வரை பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையாக 6.009 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது

கூடுதல் தண்ணீர்

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது 34 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 29.35 அடியாக உள்ளது. தற்போது 1,593 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 226 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும் செய்திகள்