கோவையில் மீண்டும் பரபரப்பு: செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள்-கார் பறிமுதல்

கோவையில் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-02-28 22:30 GMT
வடவள்ளி,

கோவை வடவள்ளியை அடுத்த லட்சுமி நகரில் உள்ள சொகுசு பங்களாவில் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் கடந்த டிசம்பர் 28-ந் தேதி மத்திய புலனாய்வு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஆனால் இந்த நோட்டு கட்டுகளில் மேல் பகுதியில் உள்ள ஒரு நோட்டை தவிர, மற்றவை வெட்டப்பட்ட வெற்று காகிதங்காக இருந்தது. இதில், ரூ.2½ லட்சம் மதிப்புடைய செல்லாத நோட்டுகள் இருந்தன. இந்த சம்பவம் அப்போது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கப்பதிவு செய்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆனந்தன், ஷாஜி, கரும்புக்கடை ஷேக், பெரோஸ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் நிபந்தனை ஜாமீன் பெற்று வடவள்ளி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கையெழுத்து போடுவதற்காக போலீஸ் நிலையம் வந்த ஷேக்கிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவரது வீட்டில் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கரும்புக்கடை வள்ளலார் நகரில் உள்ள ஷேக்கின் வீட்டிற்கு சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் செல்லாத 1000 ரூபாய் நோட்டு 15-ம், 500 ரூபாய் நோட்டு 9-ம் இருந்தது.

இதனை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அங்கிருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து ஷேக்கிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவையில் மீண்டும் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்