அரசு பள்ளிகளில் ஆவணப்படங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு இயற்கை வாழ்வியல் பயிற்சி
அரசு பள்ளிகளில் ஆவணப்படங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு இயற்கை வாழ்வியல் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
தேனி,
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி வழிகாட்டுதல்படி, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல், இயற்கை வள பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் தொடர்பாக மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, போடி மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, வயல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கி உள்ளது.
இயற்கை வாழ்வியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ள ஆவணப்படங்கள் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு திரையிட்டு காட்டப்படுகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசு, காற்று மாசு, ஒலி மாசு, சுற்றுச்சூழலுக்கு பறவைகள், தேனீக்கள், பூச்சியினங்களின் பங்களிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. மாவட்ட வேளாண் கல்வி பயிற்றுனர் விஜயராஜ் இந்த பயிற்சியை அளித்து வருகிறார். ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் கல்வி பயிற்றுனர் விஜயராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
முதற்கட்டமாக 4 பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிற பள்ளிகளிலும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சிறந்த ஆவணப்படங்களை தேர்வு செய்து மாணவ, மாணவிகளுக்கு திரையிட்டு காட்டப்படுகிறது. ஆவணப்படங்களை பார்வையிட்ட பின்பு அதில் இருந்து அவர்கள் அறிந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.
உலகம் வெப்பமயமாதலை தடுத்தல், இயற்கை வளங்களை பெருக்குதல், பசுமை சூழலை உருவாக்குதல், பறவைகள், தேனீக்கள், பூச்சியினங்களின் பங்களிப்பு இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்ற உயிரியல் உண்மைகளை மாணவ, மாணவிகள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.