அயோடின் உப்புதான் விற்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்யக்கோரி வழக்கு - மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

அயோடின் கலந்த உப்புதான் விற்க வேண்டும் என்ற உணவு பாதுகாப்புத்துறை விதிைய ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபாலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2020-02-27 22:15 GMT
மதுரை,

தூத்துக்குடி உப்பளங்களில் பல ஆண்டுகளாக இயற்கை முறையில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்கு முறை விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண உப்பை விற்கக்கூடாது, அயோடின் கலந்த உப்புதான் விற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட உப்பை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதனுக்கு தேவையான அயோடினை வேறு வகையில் பெற முடியும்.

இயற்கை உப்பை பயன்படுத்துவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே அயோடின் உப்பு பயன்படுத்துவது தொடர்பான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்த விதியை ரத்து செய்து, இயற்கை உப்பு விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்