திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடக்காமல் இருக்க கம்பிவலை

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் கம்பிவலை அமைத்து பயணிகள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லாதவாறு தடையை ஏற்படுத்தினார்கள்.

Update: 2020-02-27 23:00 GMT
திருவள்ளூர், 

மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னைக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் பயணிகள் ரெயில் மூலம் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், காய்கறி வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தை தினந்தோறும் பயன்படுத்துகின்றனர்.

இதனால் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்தநிலையில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தை கடந்து...

அது மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரெயில் பயணிகள் ஆபத்தை உணராமல் நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர்.

இதன் காரணமாக திருவள்ளூரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி அடிக்கடி இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் பயணிகள் யாரும் ஆபத்தை விலைக்கு வாங்காமல், ரெயில் தண்டவாளத்தை கடக்க கூடாது என ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரெயில் பயணிகள் யாரும் கண்டுகொள்ளாமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

கம்பிவலை

இந்த நிலையில் நேற்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் திருவள்ளூர் நடைமேடை 1 மற்றும் 2 ஆகியவற்றுக்கு இடையே ரெயில் பயணிகள் தண்டவாளத்தை கடக்காதவாறு நீண்ட தொலைவிற்கு கம்பிவலை அமைத்து பயணிகள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லாதவாறு தடையை ஏற்படுத்தினார்கள்.

மேலும் ரெயில் நிலைய நுழைவுவாயில் முன் பகுதியிலும் அவர்கள் இரும்பு தடுப்புகளை கொண்டு பயணிகள் தண்டவாளத்திற்கு செல்லாதவாறு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

முற்றுகை

இதனால் நேற்று காலையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு வந்த முதியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என பலதரப்பட்ட மக்களும் படிக்கட்டு வழியாக ஏறி செல்ல அவதிப்பட்டனர்.

அப்போது அங்கு இருந்த ரெயில்வே அதிகாரிகளை, ரெயில் பயணிகள் அனைவரும் முற்றுகையிட்டு தண்டவாளத்தை கடக்காதவாறு ரெயில்வே நிர்வாகம் கம்பி வலை அமைத்து தடை ஏற்படுத்தி உள்ளீர்கள். கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் எவ்வாறு நடைபாதையை ஏறி செல்ல முடியும் என தகராறில் ஈடுபட்டனர்.

விரைந்து முடிக்க கோரிக்கை

இதனால் ரெயில் நிலையத்திற்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியுற்றவாறு படிக்கட்டுகளில் சிரமப்பட்டு ஏறி சென்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கர்ப்பிணிகள், முதியவர்கள், வயதானவர்கள் செல்ல ரெயில் நிலையத்தில் தனி பாதை அமைத்து தர வேண்டும்.

இல்லையெனில் நகரும் படிகட்டு (எஸ்கலேட்டர்) வசதி செய்து தர வேண்டும் எனவும், ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடித்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்