லாரியில் இருந்த ரூ.10 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
செங்குன்றம் அருகே லாரியில் இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த கிராண்ட் லைன் பகுதியில் அம்பேத்கர் சிலை அருகே தனியாருக்கு சொந்தமான காலிமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு முதல் ராஜஸ்தான் மாநில பதிவு எண்கொண்ட லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு வரை அந்த லாரியை யாரும் எடுக்க வரவில்லை. கேட்பாரற்ற நிலையில் லாரி நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த அந்த நிலத்தின் உரிமையாளர், இதுபற்றி செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
ரூ.10 கோடி செம்மரக்கட்டைகள்
உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜவகர்பீட்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த லாரியை சோதனை செய்தனர். அதில் 20 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிந்தது. ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது யார்?. எங்கிருந்து, யாருக்கு கடத்திச் செல்ல முயன்றனர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.