ஆட்டோவில் கத்தியுடன் சுற்றிய சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசார் கமிஷனர் பாராட்டு
சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சுரேஷ் மற்றும் போலீசார் சென்னீர்குப்பம்-ஆவடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் தங்கள் மோட்டார் சைக்கிளில் அந்த ஆட்டோவை விரட்டிச்சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளுடன் நிலைதடுமாறி விழுந்த ஊர்க்காவல் படை வீரர் எல்லப்பன் கையில் காயம் ஏற்பட்டது. எனினும் போலீசார், அந்த ஆட்டோவை விடாமல் விரட்டிச்செல்வதை கண்ட கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிகேசவன், தனது காரில் அந்த நபர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றார்.
சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்ற பின்னர் ஆதிகேசவன், தனது காரை சாலையின் குறுக்கே நிறுத்தி ஆட்டோவை மடக்கிப்பிடித்தார். உடனே ஆட்டோவில் கத்தியுடன் சுற்றிய 4 பேரில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். சென்னீர்குப்பத்தை சேர்ந்த மாலிக் பாஷா(வயது 23) என்பவரை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் 4 பேரும் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் என தெரிந்தது. மேலும் இவர் அளித்த தகவலின்பேரில் முனுசாமி(19) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜேஷ், சபரி, செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசார் மற்றும் அவர்களுக்கு உதவிய ஊராட்சி தலைவர் ஆதிகேசவன் ஆகியோரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.