பாலியல் தொழிலுக்காக 14 வயது சிறுமி காரில் கடத்தல்? டிரைவரிடம் விசாரணை
பாலியல் தொழிலுக்காக 14 வயது சிறுமி காரில் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை,
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள் 14 வயது மதிக்கத்தக்க சிறுமி அமர்ந்து இருந்தாள். சிறுமியோடு, வாலிபர் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அப்போது, தற்செயலாக மினி வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. அதை ஓட்டி வந்த வாலிபர் காரில் உட்கார்ந்து இருந்த சிறுமியின் உறவினர் என்று கூறப்படுகிறது.
அவர் சிறுமியை பார்த்து, இங்கு எப்படி வந்தாய்? ஏன் காரில் உட்கார்ந்து இருக்கிறாய்? என்று கேட்டு உள்ளார். உடனே காரில் சிறுமியுடன் இருந்த வாலிபர் சிறுமிக்கு பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளோம் என்றும், பாலியல் தொழிலுக்கு சம்மதம் தெரிவித்து சிறுமி தங்களோடு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மினி வேன் டிரைவர் சிறுமியை காரில் இருந்து இறக்க முயற்சித்து உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
இந்த நேரத்தில் சூளைமேடு போலீசார் அங்கு ரோந்து வந்தனர். போலீசாரை கண்டதும் சிறுமியுடன் காரில் உட்கார்ந்து இருந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். சூளைமேடு போலீசார் சிறுமியை மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காரில் இருந்த டிரைவர் பிரகாசை மட்டும் போலீசார் விசாரணைக்காக பிடித்துச்சென்றனர்.
சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, தப்பி ஓடிய வாலிபர் தன்னுடைய ஆண் நண்பர் என்று கூறியதாக தெரிகிறது. சிறுமி பாலியல் தொழிலுக்காக கடத்தி வரப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய வாலிபரையும் தேடி வருகின்றனர்.