நகை பறிக்கும் போது மூதாட்டியை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
நகை பறிக்கும் போது மூதாட்டியை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவை,
கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. எஸ்டேட் காலனியை சேர்ந்தவர் சாந்தாமணி (வயது68). இவர் கடந்த 2.7.2015 அன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு ஆசாமி வாடகைக்கு வீடு கேட்பதுபோல் வந்தார். அவர் திடீரென்று சாந்தாமணியை அரிவாளால் வெட்டி நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில்,படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தாமணி சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.
இது குறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி கருணாநிதி(35) என்பவரை கைது செய்தனர். இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், கோவையில் ஒரு டாஸ்மாக் பாரில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அபராத தொகையில் ரூ.10 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.