ஊட்டியில், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சூரிய மின்னாற்றலை பயன்படுத்தும் விவசாயிகள்
ஊட்டியில், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சூரிய மின்னாற்றலை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, டர்னீப், காலிப்பிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த காய்கறிகள் குளிர்பிரதேசத்தில் அதிக விளைச்சலை தருவதால், அதனை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக உறைபனியின் தாக்கம் தொடர்கிறது. இதனால் பயிர்கள் கருகாமல் பாதுகாக்க தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தற்போது வறண்ட காலநிலை நிலவுவதால் விளைநிலங்களையொட்டி உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. நீரோடைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
ஊட்டியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய மின்னாற்றல்(சோலார்)மூலம் விவசாயம் மேற்கொள்ள மானிய விலையில் விவசாயிகளுக்கு சூரிய மின்தகடுகள் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 17 பேருக்கு மானிய விலையில் சூரிய மின்தகடுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊட்டி, முத்தோரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் மின் தகடுகளை பொருத்தி உள்ளனர்.
சூரிய ஒளி மூலம் மின்னாற்றல் சேமிக்கப்பட்டு தானாகவே மோட்டார் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெயில் அடித்து வருவதால் சூரிய மின்னாற்றல் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுவதோடு, அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை சுத்தம் செய்ய பயன்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இவ்வாறு சூரிய மின்னாற்றலை பயன்படுத்தி மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் விவசாயிகளை அதிகாரிகள் பாராட்டினர்.