தமிழகத்திலேயே முதல் முறையாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊட்டியில் ஆவின் பாலகம் - நிர்வாக இயக்குனர் திறந்து வைத்தார்

தமிழகத்திலேயே முதல் முறையாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊட்டியில் ஆவின் பாலகத்தை நிர்வாக இயக்குனர் வள்ளலார் திறந்து வைத்தார்.

Update: 2020-02-27 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் முயற்சியால் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊட்டியில் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராஸ் பூ மாலை வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் ரிப்பன் வெட்டி ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் ஆவின் தயாரிப்பு பொருட்களான நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் போன்றவற்றை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நீலகிரி திருநங்கைகள் சுய உதவிக்குழுவுக்கு தமிழகத்திலேயே முதல் முறையாக ஆவின் பாலகம் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் 5 திருநங்கைகள் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த பாலகம் உதவிகரமாக இருக்கும். ஊட்டியில் திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட இந்த முன்னோடி திட்டத்தின் செயல்பாட்டை அறிந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால், நெய் தேசிய அளவில் தனி சிறப்பு பெற்றது. கேரள மாநிலம் கோட்டக்கல் என்ற இடத்தில் ஆயுர்வேத மருத்துவமனைக்கு தினமும் 3 ஆயிரத்து 200 லிட்டர் பால், மாதத்துக்கு 3 ஆயிரம் கிலோ நெய் நீலகிரியில் இருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் தினமும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பால் தரம் உயர்ந்ததாகவும், விலை குறைவாகவும் உள்ளது.

தமிழகத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள அமுல் பால் தயாரிப்பு பொருட்களை போன்று நீலகிரியை உருவாக்க திட்டம் உள்ளது. கலெக்டரின் ஒத்துழைப்புடன் விவசாயிகள், கிராம மக்கள் இணைந்து பால் உற்பத்தியை அதிகரித்து உணவு பொருட்களை தயாரிக்க ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது. தோடர் இன மக்களின் வளர்ப்பு எருமைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே ஊட்டியில் தான் பசு மாடுகள் இன விருத்திக்கான உயர்தர விந்து உற்பத்தி நிலையம், பாதுகாப்பு நிலையம் சிறப்பாக இயங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட ஆவின் தலைவர் மில்லர், மகளிர் திட்ட இயக்குனர் பாபு, ஆவின் பொது மேலாளர் சுமதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆவின் பாலகம் அமைத்து கொடுத்ததால் திருநங்கைகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மலை மாவட்டமான நீலகிரியில் எங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதை கருத்தில் கொண்டு ஆவின் பாலகம் அமைத்து கொடுக்கப்பட்டதன் மூலம், எங்களது வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு உள்ளது. ஆவின் தயாரிப்பு பொருட்களோடு, தேநீர் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்