கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்; 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் 500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

Update: 2020-02-27 22:00 GMT
புதுக்கோட்டை, 

சர்வதேச அளவில் பதக்கம் பெறும் திறனாய்வாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் நடத்தப்பட்ட உடற்திறன் தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

இதில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டியில் 2019-20-ம் ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட உடற்திறன் தேர்வில் 10-க்கு 10 அல்லது ஏதாவது இரண்டு நிகழ்வுகளில் 9 மற்றும் 8 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்பட உள்ளனர். மேலும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் சாதனையின் மாநில அளவில் ஆய்வு செய்து, விளையாட்டு விடுதிகள் மற்றும் பள்ளிகளில் சேர்ந்திட வாய்ப்பு அளிப்பதோடு, சிறப்பு விளையாட்டு அகடாமியில் சேர்க்கப்பட்டு, தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்