மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.1¼ கோடி கடனுதவி; கலெக்டர் வழங்கினார்

குடியாத்தத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.1 கோடியே 43 லட்சம் கடனுதவிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

Update: 2020-02-27 22:30 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வேலூர் மாவட்ட கலெக்டர் ஆ.சண்முகசுந்தரம் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் உள்ள நகர்புற வாழ்வாதார மையத்தை அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகள் 10 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் என ரூ.50 ஆயிரம் கடனுதவியும், நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்திற்கான கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் மரம் ஏறும் எந்திரங்கள், விவசாய வேளாண் கருவிகளை வழங்கினார்.

மகளிர் குழு சார்பில் நகராட்சி அலுவலக கட்டிடத்தின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி தோட்டத்தை பார்வையிட்டார். தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை தெருவில் உள்ள சாலையோர வியாபாரிகளின் கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

 நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களை சந்தித்து லுங்கி உற்பத்தி குறித்து கேட்டறிந்து, கைத்தறியில் லுங்கி நெய்யும் பணிகளை பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள ஊதுவத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் தொழில் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் எர்த்தாங்கல் பகுதியில் கிராம சேவை மையத்தை திறந்து வைத்தார். அக்ராவரம் பகுதியில் மூங்கில் கூடை பின்னுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குனர் ஏ.ஆர்.சிவராமன், டி.சி.எம்.எஸ். தலைவர் ஜெ.கே.என்.பழனி, தாசில்தார் வத்சலா, நகராட்சி ஆணையாளர் எச்.ரமேஷ், பொறியாளர் உமாமகேஸ்வரி, நகராட்சி மேலாளர் சூரியபிரகாஷ், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் கேசவன், ஆர்.மூர்த்தி உள்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்