சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் வாணாபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2020-02-27 22:00 GMT
வாணாபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து அணையின் தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 5–ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை பகுதிகளுக்கு வரும் இடதுபுற கால்வாய் வழியாக 40 ஏரிகளுக்கும், வலதுபுற கால்வாய் வழியாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ள 48 ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்தவகையில் வாணாபுரம், குங்கிலியநத்தம், அகரம்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து தண்ணீர் கடைமடை வரை செல்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீரை வீணாக்காமல் கிளை கால்வாய் வழியாக கொண்டு செல்கின்றனர். மேலும் தண்ணீரை விவசாயிகள் யாராவது வீணாகி வருகின்றனரா? என்றும் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியதையடுத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு ஏதுவாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு அதன் முழு கொள்ளளவை எட்டும் அளவிற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஏரிகளில் தண்ணீர் நிரப்பி வருவதால் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறுகளிலும் தண்ணீர் அதிகளவில் கிடைப்பதால் குடிநீர் தட்டுப்பாடும் ஓரளவுக்கு சரி செய்யப்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்