சிறுமி கொலை வழக்கில், போலீசார் மெத்தனம் செய்வதால் ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக இருப்பதால் ரூ.1 கோடி இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நானும், எனது மனைவியும் பணிக்கு சென்று விட்டோம். அப்போது, அடையாளம் தெரியாத சில நபர்கள் வீட்டிலிருந்த எனது 15 வயது மகளை கற்பழித்து கொடூரமாக கொலை செய்தனர். அத்துடன் வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த வழக்கில் போலீசார் ஆரம்பத்தில் இருந்தே அலட்சியம் காட்டி வந்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும், பின்னர் சி.பி.ஐ.க்கும் மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வந்தபோது, எங்களுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிககும் நபர்களுக்கு எதிரான ஆவணங்களை திரட்ட சி.பி.ஐ. போலீசார் தவறிவிட்டனர். எனவே, இந்த வழக்கை முடித்து வைப்பதாக திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சம்பவம் நடந்தபோது வீட்டில் இருந்த ஒரே சாட்சி 5½ வயதுடைய எனது மகன் மட்டுமே. இது குறித்து கணேஷ்நகர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கை சரியாக விசாரணை செய்யாததால் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
தமிழக போலீசாரின் மெத்தனத்தால் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே, உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள எங்களுக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், தமிழக அரசின் முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.