பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கண்டித்து பெங்களூரு விதானசவுதாவில் காங்கிரசார் தர்ணா சித்தராமையா தலைமையில் நடந்தது
பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கண்டித்து பெங்களூரு விதானசவுதாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னாள் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம், மூத்த சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமியை பாகிஸ்தானின் ஏஜெண்டு என்று விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் பசன கவுடா பட்டீல் யத்னாளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் பசனகவுடா பட்டீல் யத்னாளை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சித்தராமையா பேட்டி
தர்ணா போராட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னாள் எம்.எல்.ஏ., சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஆனால் பா.ஜனதாவினர் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
வருகிற 2-ந் தேதி கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பசனகவுடா பட்டீல் யத்னாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அங்கு தர்ணா நடத்துவோம். சட்டசபைக்கு வெளியேயும் தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்”.
இவ்வாறு அவர் கூறினார்.