கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தவிர்க்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தி உள்ளார்.
அரியலூர்,
சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்டு தொழிற்சாலைகளும், தங்களது ஆலைகளில் இயங்கும் கனரக வாகனங்களை கண்காணிக்க வேண்டும். மேலும் மயிலாண்டகோட்டை, வி.கைகாட்டி-அரியலூர் சாலை மற்றும் தளவாய், செந்துறை போன்ற பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கனரக வாகனங்களில் 2 டிரைவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும், அனைத்து கனரக வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் பிரதிபலிக்கும் ஒளிப்பான்களை வாகனங்களில் நன்கு தெரியும்படி ஒட்ட வேண்டும். கனரக வாகனங்களில் அதிகம் பாரம் ஏற்றிக்கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை இடைவெளிவிட்டு இயக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கனரக வாகனங்களை இயக்க வேண்டும், மற்ற நேரங்களில் ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டும் நிறுத்தி வைக்கவேண்டும். கனரக வாகனங்களில் பொருட்கள் ஏற்றிச் செல்லும்போது தார்ப்பாயால் மூடப்பட வேண்டும். ஒவ்வொரு டிரைவரும் தங்களின் குடும்ப புகைப்படங்களை இருக்கைக்கு முன்பு வைத்து குடும்பத்தினரை எண்ணி சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் திருமேணி (அரியலூர்), மோகன்தாஸ் (ஜெயங்கொண்டம்), அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிமெண்டு ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலை துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.