டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்: திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 70 பேர் கைது
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தபால் நிலையத்தையும் அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திலும் போராட்டம் நடந்து வருகிறது.
இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த சம்பவத்தை கண்டித்தும் திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி த.மு.மு.க. மாவட்ட தலைவர் நசீர் தீன் தலைமையில், துணைத்தலைவர் சித்திக் முன்னிலையில் த.மு.மு.க.வினர் டவுன் ஹாலில் இருந்து திருப்பூர் குமரன் சிலை வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து ரெயில் மறியல் செய்ய ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் நுழைவு வாயில் பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், ரெயில் மறியலுக்கு முயன்ற த.மு.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து த.மு.மு.க.வினர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் கோஷமிட்டபடி, தபால் நிலையத்திற்குள் புகுந்தனர். இதனால் தபால் நிலையத்திற்குள் நின்ற பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும், த.மு.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் உள்ளே சென்றவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். தொடர்ந்து தபால்நிலைய கதவிற்கு போலீசார் பூட்டு போட்டனர். இதன் பின்னர் போராட்டக்காரர்கள் அங்கும், இங்குமாக ரோட்டில் சென்றபடி கோஷமிட்டுக்கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இந்நிலையில் குமரன் வணிக வளாகம் அருகே குமரன் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்தபடி நின்றன.
போக்குவரத்து பாதி்ப்பும் ஏற்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் அப்பாஸ், துணைச்செயலாளர் ஹாரூன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிக், துணைச்செயலாளர்கள் சர்புதீன், சபீர், த.மு.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் பஸ்களில் ஏற்றப்பட்டு, திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள சேம்பர்ஹால் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதன் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டம் நடந்த இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் வந்து பார்வையிட்டார். மேலும், திருப்பூர் போலீஸ் உதவி கமிஷனர்கள் (தெற்கு) நவீன்குமார், (வடக்கு) வெற்றிவேந்தன், கஜேந்திரன் (போக்குவரத்து) உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.