டெல்லி வன்முறையை கண்டித்து ‘கேட்வே ஆப் இந்தியா’வில் போராட்டத்தை தடுக்க போலீஸ் குவிப்பு மெரின் டிரைவில் திடீர் போராட்டம் செய்த 25 பேர் மீது வழக்கு

டெல்லியில் நடந்து வரும் வன்முறையை கண்டித்து கேட்வே ஆப் இந்தியாவில் போராட வருபவர்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-02-26 00:00 GMT
மும்பை, 

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, மும்பையில் உள்ள ‘கேட்வே ஆப் இந்தியா’வில் கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் தற்போது நடந்து வரும் வன்முறை சம்பவத்தை கண்டித்து கேட்வே இந்தியாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த மக்கள் திரளவேண்டும் என சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. எனவே கேட்வே ஆப் இந்தியாவில் போராட்டத்துக்கு மக்கள் திரண்டு விடாமல் தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்குள்ள சாலைகளிலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன.

மெரின் டிரைவில் திடீர் போராட்டம்

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மும்பை மெரின் டிரைவ் பகுதியில் திரண்ட பலர் திடீரென டெல்லியில் நடந்து வரும் வன்முறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சங்கிராம் சிங் நிசாந்தர் கூறுகையில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் 20 முதல் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம்’’ என்றார்.

மெரின் டிரைவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் கேட்வே ஆப் இந்தியா பகுதிக்கு சென்று உள்ளனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால், அவர்கள் மெரின் டிரைவ் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்