திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-02-25 22:15 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் புதிய ரே‌‌ஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, கடன் உதவி, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி என மொத்தம் 325 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாகச் சென்று குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

பரிசுகளை வழங்கினார்

அப்போது அவர் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டியை வழங்கினார். பின்னர் அவர் மும்மாரி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ஏரி குளங்களைத் தூர்வாருவதற்கு ஒத்துழைப்பு அளித்த கிராம பொதுமக்களுக்கும், தனியார் நிறுவன பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பார்வதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்