வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காப்பகங்கள் - முதன்மை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காப்பகங்கள் அமைப்பது குறித்து முதன்மை செயலாளர் முடிவெடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2020-02-25 22:15 GMT
மதுரை,

உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய 17 வயது மகளுடன் வசித்து வருகிறேன். நான் கூலி வேலைக்காக சென்ற நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த 55 வயதுடைய பொன்ராஜ், எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் அவள் தற்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறாள். பொன்ராஜ் குடும்பத்தினர் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான செல்வாக்கு உடையவர்கள்.

எனவே எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, எனது குடும்பத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவும், எனது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி வழங்கியும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, “மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்கவும், டி.என்.ஏ. பரிசோதனைக்காக கருவை பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “18 வயதை கடந்த ஆதரவற்ற மற்றும் இது போன்ற வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகங்களை அமைப்பது குறித்து, தமிழக அரசின் முதன்மை செயலாளர், 8 வாரத்தில் கொள்கை ரீதியான முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கை வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார். 

மேலும் செய்திகள்