7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
திருச்செந்தூரில் நடைபெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வட்ட தலை நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீதான மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.
வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணி முதுநிலை தொடர்பாக கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக ஆணைகளை வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில் வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்்வு காண வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் உள்ள சிரமங்களை உடனடியாக போக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் 81 ஆதிதிராவிடர் தனிநல தாசில்தார் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமீம்ராசா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட இணை செயலாளர் காசிநாததுரை, மாவட்ட துணை செயலாளர் வரதராஜன், வட்டகிளை தலைவர் பாலகுமார், வட்ட கிளை செயலாளர் சிவக்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சேதுபதி நன்றி கூறினார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தை கலைக்கக்கூடாது, உள்வட்ட துணை வட்டாட்சியர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும், பட்டதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்த வேண்டும், சம்பளம் பெறுவதில் ஏற்படும் சிரமத்தை களைய வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். வட்ட கிளை செயலாளர் வளன் அரசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வக்குமார் மற்றும் பல்வேறு துறை சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.