மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார் 7 பேர் காயமின்றி உயிர் தப்பினார்கள்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக 7 பேர் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

Update: 2020-02-25 23:00 GMT
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுநெம்மேலி குப்பம் அருகில் கார் சென்றபோது இடது பக்கத்தில் உள்ள மீனவர் கணபதி (வயது 65) என்பவர் வீட்டுக்குள் கார் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது.

முன்னதாக அதிவேகத்தில் வந்த அந்த கார் வீட்டின் முகப்பில் உள்ள மின் கம்பம், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அந்த வீட்டு வாசலில் புகுந்தது.

இதில் காரின் ஒரு பகுதியும், மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தன. அப்போது வீட்டு வாசல் ஓரத்தில் படுத்திருந்த 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

முன்னதாக மின் கம்பத்தில் அந்த கார் மோதி, வீட்டுக்குள் புகுந்ததால் அப்போது மின் கம்பிகளில் சேதம் ஏற்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பி அறுந்து விழுந்து இருந்திருந்தாலும் மின்சாரம் தாக்கி உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கும்.

அந்த காரில் வந்த 4 வாலிபர்களும் காயமின்றி உயிர் தப்பினார்கள். அதிவேகத்தில் கார் வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், கார் டிரைவரின் கவனக்குறைவே இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்று அந்த பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்