கடலில் அதிக நுரை பொங்கிய விவகாரம்: அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கமிட்டி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கமிட்டி அமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், திருவான்மியூர், பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் கடல் அலைகளில் இருந்து அதிக அளவு நுரை பொங்கி வந்தது. கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்த ரசாயன கழிவுநீர் தான் இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தை சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.
இதன்பின்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நீர்நிலைகளை மாசு இல்லாமல் பாதுகாக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அடையாறு ஆற்றில் சாதாரண கழிவுநீர், ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க சென்னை கலெக்டர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளை அமைப்பினர் கொண்ட கமிட்டி ஏற்படுத்தப்படுகிறது. இந்த கமிட்டி, அடையாறு ஆற்றில் கழிவுநீரை கலப்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.