ஸ்டெர்லைட் விவகாரம்: ரஜினிகாந்த் ஒரு போதும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகமாட்டார் - சமூக ஆர்வலர் முகிலன் பேட்டி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ரஜினிகாந்த் ஒரு போதும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகமாட்டார் என சமூக ஆர்வலர் முகிலன் கூறினார்.

Update: 2020-02-25 22:45 GMT
மதுரை,

மதுரை மாவட்ட கோர்ட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஆஜரான பின்னர் சமூக ஆர்வலர் முகிலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை சமூக விரோதிகள் எனவும், தடைக்கு காரணமாக இருந்தவர்களை ஜல்லிக்கட்டு நாயகன் எனவும் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு குறித்து விசாரித்து வரும் ராஜேஸ்வரன் ஆணையம் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. முதல்-அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு ரஜினிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாதா? ஸ்டெர்லைட் விவகாரத்தில் ரஜினிகாந்த் ஒரு போதும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகமாட்டார். அவர் பா.ஜ.க.வின் ஊதுகுழல் போன்று பேசிவருகிறார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டு வன்முறைக்கு காரணமான போலீஸ் அதிகாரிக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தீவிரமாக நடைபெறும். தமிழகம் இது போன்ற போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெறும்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். டெல்டா மாவட்டங்கள் வேளாண்மை பாதுகாப்பு மண்டலம் என்பது ஏமாற்று அறிவிப்பு. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணெய் கிணறுகள் குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை. 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசை மிரட்டுகிறது. இந்தியாவை அமெரிக்க தொழில் அதிபர்களிடம் விற்பதற்காகத்தான் டிரம்ப் வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்