பாளையங்கோட்டையில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் மகப்பேறு நிதி உதவி திட்டத்தை எளிமைப்படுத்த கோரிக்கை
பாளையங்கோட்டையில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
மகப்பேறு நிதி உதவி திட்டத்தை எளிமைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கமும், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பும் இணைந்து நேற்று பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மாநில பொதுச்செயலாளர் பாப்பா தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நெல்லை மாவட்ட தலைவர் ஜெயந்தி, செயலாளர் முருகம்மாள், பொருளாளர் தங்கராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தற்காலிக பணிநீக்கம்
பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட செவிலியர்கள், ஊழியர்களிடம் விளக்கம் கேட்காமலும், விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்காமலும் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிடவேண்டும். பிரசவ காலங்களில் தாய் இறப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்காக செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடவேண்டும். மகப்பேறு நிதி உதவி திட்டத்தை எளிமைப்படுத்தவேண்டும். ஆயா ஊதியம் ரூ.2 ஆயிரம் வழங்கவேண்டும். பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் லலிதா, மரியசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.