கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சங்க தேர்தல் சரத்பவார் கோரிக்கை
கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சங்க தேர்தல் நடத்த மாநில அரசிடம் கோரிக்கை வைப்பேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். மேலும் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
ஜனநாயக நாட்டில், மாணவர்களும் கல்லூரி அளவிலே அவர்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும். விரைவில் கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சங்க தேர்தல்களை நடத்த மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை காரணம் காட்டி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகள் ஆகும்...
இதேபோல சமீபத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சரத்பவாரை பற்றி பி.எச்.டி. (ஆராய்ச்சி) படிப்பு படிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து மாணவி ஒருவர்சரத்பவாரிடம் கேள்வி எழுப்பினார்
அதற்கு சரத்பவார், “வழக்கமாக முதுகலை பட்டம் படித்த பின்னர் பி.எச்.டி. படிக்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் சந்திரகாந்த் பாட்டீல் என்னைப்பற்றி பி.எச்.டி. படிக்க வேண்டும் என ஆசைப்படுவதால், அவர் படிப்பை முடிக்க குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும்” என நகைச்சுவையாக கூறினார்.