பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் கைதாகி சிறையில் அடைப்பு: அமுல்யாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுல்யாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு சுதந்திர பூங்காவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால், தேசத்துரோக வழக்கில் சிக்கமகளூருவை சேர்ந்த கல்லூரி மாணவியான அமுல்யாவை உப்பார்பேட்டை போலீசார் கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர். அமுல்யா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட விவகாரத்தில், சிலரது தூண்டுதல் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த வழக்கை தீவிரமாக எடுத்துள்ள போலீசார், சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, அமுல்யாவின் நடவடிக்கைகள், அவர் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டுபிடிக்க, அவரது பேஸ்புக் (முகநூல்), டுவிட்டர் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாகவும் கடந்த ஜனவரி மாதம் கூட விதானசவுதா முன்பாக அமுல்யா தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அவரை போலீசார் கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்தது தற்போது தெரியவந்துள்ளது.
காவலில் எடுத்து விசாரிக்க...
இதற்கிடையில், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் போன்று தானும் வர வேண்டும் என்று அமுல்யா தனது தோழிகளிடம் கூறியதாகவும், அதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம், பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் அவர் பேசி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அமுல்யாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுல்யாவை காவலில் எடுத்து விசாரிக்கவும், இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் சிறப்பு விசாரணை குழு போலீசார் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அமுல்யாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த போராட்டத்தின் போது காஷ்மீர் விடுதலை என்ற பதாகையுடன் வந்த ஆருத்ராவும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள ஆருத்ராவை நேற்று, அவரது தோழிகள், நண்பர்கள் சந்தித்து பேசினார்கள்.