மகளுடன் மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

மாடியில் இருந்து குதித்து 5 வயது மகளுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2020-02-24 23:00 GMT
செங்குன்றம், 

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு சாமி நகரைச் சேர்ந்தவர் திருப்பதி ரெட்டி( வயது 35). இவருடைய மனைவி சுனிதா. இவர்களுடைய மகன் ஹரிஷ்(7). இவர்களுக்கு 5 வயதில் ஹரிகா என்ற மகளும் இருந்தாள்.

திருப்பதி ரெட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பூண்டு குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

மகளுடன் தற்கொலை

நேற்று முன்தினம் மாலை திருப்பதி ரெட்டி தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். திடீரென அவர், தனது மகள் ஹரிகாவை தூக்கிக்கொண்டு வீட்டின் மாடிக்கு சென்றார். சிறிது நேரத்தில் திருப்பதி ரெட்டி, தனது மகளுடன் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தந்தை-மகள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இருவரின் உடல்களை பார்த்து சுனிதா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதகாட்சி பரிதாபமாக இருந்தது.

மன அழுத்தம்

இதுகுறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருப்பதி ரெட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பதிக்கு நடைபயணம் சென்றார். ஆனால் பாதியிலேயே வீடு திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு அவர், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் அவர் தனது மகளுடன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்