ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை

பொங்கலூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் லாக்கரை உடைத்து 1,500 பவுன் நகை மற்றும் ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-25 00:30 GMT
பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலையில் பொங்கலூர் அருகே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் மேலாளராக கோவையை அடுத்த இருகூரை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 2 பேர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.

இந்த வங்கியில் 3 அறைகளில் பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளது. இந்த அறை கான்கீரிட் சுவரால் கட்டப்பட்டுள்ளது. இந்த 3 அறைகளிலும் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் 116 வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை வைத்துள்ளனர். இவர்கள் குறைந்தபட்சம் 20 பவுன் நகை முதல் அதிக பட்சமாக 200 பவுன் நகை வரை பாதுகாப்பு பெட்டத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

கண்காணிப்பு கேமரா

கடந்த 21-ந் தேதி மாலையில் வழக்கம் போல் வங்கியில் பணி முடிந்ததும், வங்கியை பூட்டி விட்டு வங்கி மேலாளர் உள்பட அனைவரும் சென்றுவிட்டனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை வழக்கம்போல் வங்கி மேலாளர் பணிக்கு வந்தார். பின்னர் வங்கியின் சுற்றுச்சுவர் கேட்டை திறந்து உள்ளே சென்றார். பின்னர் வங்கியின் பிரதான கதவை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது வங்கிக்குள் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பு ஒயர் துண்டிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. மேலும் வங்கி அறையின் கிழக்குப்புறமாக உள்ள ஜன்னல் கம்பி ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர், வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் (லாக்கர்), பணம் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு விரைந்து சென்றார். அங்கு இருந்த பாதுகாப்பு பெட்டக 3 அறையின் கதவும் உடைக்கப்பட்டு, சுவர்களும் இடிக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகை கொள்ளை போயிருந்தது. மேலும் வங்கியில் பணம் வைத்து இருந்த பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

ஒயர் இணைப்புகள் துண்டிப்பு

இதையடுத்து அவினாசிபாளையம் போலீசாருக்கு வங்கி மேலாளர் தகவல் தெரிவித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வங்கிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் வங்கிக்கு நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள், வங்கியின் முன்புற சுற்றுச்சுவர் கேட்டை உடைக்காமல், வங்கியின் கிழக்கு புறமாக சென்றுள்ளனர். வங்கியின் கிழக்கு புறத்தில் வங்கியை சுற்றி சுற்றுச்சுவர் கிடையாது. அதற்கு பதிலாக அந்த பகுதியில் 6 அடி உயரத்திற்கு இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேலியின் அடிப்புறத்தில் ஒரு ஆசாமி நுழையும் அளவுக்கு கம்பி துண்டிக்கப்பட்டு இருந்தது. எனவே அதன்வழியாக உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள், அங்கிருந்த ஜன்னல் கம்பியை அறுத்து அதன்வழியே வங்கிக்குள் சென்றுள்ளனர். முதலில் அங்கு பொருத்தப்பட்டு இருந்த 5 கண்காணிப்பு கேமராவையும் உடைத்து விட்டு, பின்னர் மற்ற கண்காணிப்பு கேமராவுக்கு செல்லும் ஒயர் இணைப்பையும் துண்டித்து உள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த 3 பாதுகாப்பு பெட்டக சுவரை உடைத்து உள்ளனர்.

1,500 பவுன்- ரூ.19 லட்சம்

இந்த 3 பாதுகாப்பு பெட்டக அறைகளிலும் மொத்தம் 31 லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தது. முதல் பாதுகாப்பு பெட்டக அறையில் 18 லாக்கர், 2-வது பாதுகாப்பு பெட்டக அறையில் 3 லாக்கர், 3-வது பாதுகாப்பு பெட்டக அறையில் 10 லாக்கர் என மொத்தம் 31 லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் 2 லாக்கரில் நகை ஏதும் இல்லை. மற்ற 29 லாக்கர்கர்களிலும் இருந்த 1,500 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துள்ளனர். அதுபோல் பணம் வைத்து இருந்த பெட்டகத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.18 லட்சத்து 93 ஆயிரத்தை அள்ளிக்கொண்டு வந்த வழியாக தப்பிச்சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவினாசிபாளையம் போலீசில் வங்கி மேலாளர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொங்கலூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை நடந்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்